குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

வள்ளலாரும் பெரியாரும் மருத்துவர் செய. இராசமூர்த்தி சாதி, மதம், சமயம் அத்யாயம் # 2

30.12.2018-“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகல்லவே – (5566)

என்று வரும் வள்ளலாரின் அருட்பாவிலுள்ள இப்பாடலின் பொருள் விளக்கிச் சொல்லாமலே எல்லோருக்கும் எளிதில் புரியும்.

நான்கு வருணம் என்னால் படைக்கப்பட்டிருக்கிறது என்று பகவத்கீதையில் கண்ணன் உபதேசிப்பதாக உள்ளது. ஆனால் வள்ளலாரோ

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே

மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவார் இலைநீ …. (4174)

என்று தனது சீர்திருத்தத்தை அருட்பாவில் காட்டி இந்தச் சமுதாயப் பாகுபாட்டை வன்மையாக கண்டிக்கிறார். அவர் கண்டிக்கும் விதமே புதுமையாக உள்ளது. நால் வருணம் ஆசிரமம், ஆசாரம் என்று வகுக்கப்பட்டிருக்கும் இந்த முறைகள் குழந்தைப் பருவத்தில் விளையாடும் சிறுபிள்ளை விளையாட்டைப் போன்றது என்று சாடுகிறார். உலகில் உள்ள மக்களை மதங்களும் சமயங்களும் பெரும் குழுக்களாகத் தனித்தனியெ பிரிக்கின்றது எனில் சாதிகள் அந்த பெரும் குழுக்களைச் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கின்றன. உலகில் உள்ள பெரும்பாலான மதங்களில் சாதிகள் என்னும் உட்பிரிவுகள் கிடையா. இந்து மதத்தில் மட்டும் தான் நான்கு வருணமும் அந்த வருணத்திற்கு கீழ்ப் பல ஆயிரம் சாதிகளும் எனப் பகுக்கப்பட்டிருக்கிறது.

 

இஸ்லாமில் சில பிரிவுகள் இருந்தாலும் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்று விட்டால் அனைவரும் சமமே.

 

இந்து மதத்தில் சில தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவே கூடாது என்னும் கொடிய நிலை இருந்தது. அந்த சமுதாயக் கொடுமையை மகாத்மா காந்தி, தந்தை பெரியார், அம்பேத்கார் போன்றவர்கள் போக்குதற்குப் பெரும் போராட்டங்களை நடத்தியது அனைவரும் அறிந்ததே. அந்த போராட்டத்தின் விளைவாகவே இன்று நிலைமை நிறையவே மாறியுள்ளது.

 

மனித சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் இந்த சாதிப்பாகுபாட்டையும், வேறுபடுத்தும் மத, சமயப் பாகுபாட்டையும் வள்ளற்பெருமான் பல இடங்களில் கண்டிக்கிறார்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உலக பொதுமறையாம் திருக்குறள் பிறப்பால் அனைவரும் சமமே என்கிறது. ஆனால் நான்கு வருணங்களோ, பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன், (பிராமணன்) தோளில் பிறந்தவன், (ஷத்ரியன்) தொடையில் பிறந்தவன், (வைசியன்) காலில் பிறந்தவன் (சூத்திரன்) என்று வேறு வேறாகப் பிரித்துப் பிறப்பால் வேற்றுமை கற்பிக்கிறது.

 

ஷத்திரியன் அரசாள, வைசியன் வியாபாரம் செய்ய, சூத்திரன் உடலால் உழைத்து மற்ற மூவருக்கும் உதவி செய்து வாழ வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் பிராமணனுக்கு என்று எந்த தொழிலும் வரையறுக்கப்படவில்லை. இது தான் மனுதர்மம் அதாவது மனு என்னும் பிராமணர் எழுதி வைத்துள்ள நீதி.

 

ஒரு காலத்தில் ஒன்பதாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் படம் பார்த்து தெரிந்து கொள் என்று அச்சிடப்பட்டுக் கற்பிக்கப்பட்ட பாடப்புத்தகம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

 

1

 

ஷத்திரியன் – ராஜாவைப்போல் படம் – நாட்டை ஆள்பவன்

2. வைசியன் – ஒரு வியாபாரியைப் போல் படம் – வியாபாரம் செய்பவன்

3. சூத்திரன் – ஏர் உழுபவன் படம் – விவசாயம் மற்ற தொழில் செய்பவன்

4. பிராமணன் – பூணூல் அணிந்து ஒருவன் படம் – நல்லவன்

 

இதில் பிராமணனுக்கு தொழிலாக நல்லவர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும். பிராமணன் நல்லவன் என்றால் மற்ற மூன்று வருணத்தைச் சார்ந்தவர்கள் நல்லவர்கள் இல்லையா? எனும் கேள்வி எழும். வேத நூலை ஆதாரமாகக் காட்டிப் பிராமணருக்கு இரண்டு முக்கியத் தொழிலைக் கூறுவர்.

 

1. யஜனம் அதாவது பண்ணுவது

2. யாஜனம் அதாவது பண்ணிவைப்பது

 

யாகத்தையும், ஹோமத்தையும் பண்ணி, பண்ணி வைத்துத் தட்சணை பெறுவது அவர்களது தொழிலாகக் கூறப்படும். மேற்கூறிய இரண்டு காரியம் செய்ய உடலுழைப்பு தேவையில்லை. இது சமுதாயத்தில் ஒரு ஏற்பாடாகச் செய்யப்பட்டு அதன் விளைவாக இந்த நாடு பலவகையிலும் முன்னேற வகுக்கப்பட்டது என்றும், அவரவர் மூளைப்பலத்திற்கும், உடல் பலத்திற்கும் ஏற்பச் செய்யப்பட்டிருக்கும் பிரிவு என்றும் சில புரட்டு ஆன்மீகவாதிகள் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.

 

என்னதான் சூத்திரன் மூளைபலம் அல்லது அறிவாற்றல் உள்ளவனாக இருந்தாலும் அவன் மற்ற மூன்று வருணத்தால் செய்யும் தொழிலை செய்யக்கூடாது என்றும், இன்னும் மேலும்

“சூத்திரன் வேதம் படிக்க கூடாது. படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும், வேதம் கேட்கக் கூடாது, கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் எனவும் மனுதர்மம் கூறுகிறது.

 

ஒரு பிராமணன் கொலை செய்து விட்டால் அவனுக்கு தலையில் மொட்டை அடித்தல் என்கிற அதிகபட்சத் தண்டனை போதும் என்றும், ஒரு சூத்திரன் கொலை செய்து விட்டால் அவனை பதிலுக்கு கொல்ல வேண்டும் எனவும் ஒரு குலத்துக்கு ஒரு நீதி காட்டியிருக்கின்ற மனுதர்மத்தின் அயோக்கிய தீர்ப்புக்கு இன்றைய ஆன்மீக வியாபாரிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

 

மதத்தையாவது ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு விடலாம். ஆனால் மதத்திற்குள்ளேயே ஏற்ப்பட்டிருக்கும் சாதி இழிவுகளை எவன் ஏற்றுக் கொள்வான்? ஒருவன் மதம் விட்டு மதம் மாறலாம். அதற்கு சட்டமும், சமுதாயமும் கூட அங்கீகாரம் அளிக்கிறது. ஆனால் ஒருவன் சாதி விட்டுச் சாதி மாறமுடியாது. இந்த பிறவியில் தாழ்த்தப்பட்டவன் என்றால் சாகும் வரை தாழ்த்தப்பட்டவன் தான். இந்த சாதிக் கொடுமைகளைக் கண்டு பகுத்தறிவாளர்கள் எப்படி வாளாயிருப்பார்கள்?

 

மனிதரில் சிலரை பஞ்சமன் என்றும், சூத்திரன் என்றும் தாசன் என்றும் அடிமைப்படுத்தும் கொடுங்காரியங்களை அறிவுள்ள எவனாவது ஏற்பானா? அதனால் தான் வள்ளலார், பெரியார் போன்றவர்கள் இந்த கொடுஞ்செயலை எதிர்த்தார்கள்.

 

மலத்திலே உழலும் பன்றி, சொறிநாய், கழுதைகள் கூட அக்ரஹாரத்தில் உலாவ அனுமதிக்கும் அவர்கள் பஞ்சமர்கள் அத்தெருவில் நடக்கக் கூடாது என்று விதித்திருக்கும் படுபாதகச் செயலைக்கண்டு மனிதரில் புனிதர் வள்ளலாரும், தந்தை பெரியாரும் எதிர்த்தனர்.

 

மதங்களும், சமயங்களும் மனித குல ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கின்றன. சாதிப் பிரிவினைகள் இன்னும் மேலும் வேற்றுமைத்தீக்கு எண்ணெய் வார்ப்பது போல உள்ளதால் மதங்களையும், சமயங்களையும் சாதிகளையும் இவ்விருவரும் வெறுக்கின்றனர்.

 

“சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்”…. (4075)

 

என்று சாதியையும், மதத்தையும், சாத்திரக் குப்பைகளையும் தவிர்த்ததாக வள்ளலார் பாடுகிறார்.

 

சாதியும் மதமும் சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி

 

என்று தன்னுடைய அருட்பெருஞ்சோதி அகவலில் வள்ளற்பெருமான் அவைகளைப் பொய் என்கிறார். “மதம் என்னும் பேய் பிடித்தாடுகின்றார் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செய்யும் மாநடம் காண்குவாரோ?” என்று கேட்கிறார்.

 

மதம் என்னும் பேய் பிடித்திருப்பவர்களால் உள்ளத்தில் உள்ள இறைவனை உணர முடியாது என்பது இதன் பொருள். இளம் வயதிலேயே “மதமான பேய்பிடியாதிருக்க வேண்டும்” என்று பாடியவர் வள்ளலார்.

 

“மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்

வழிதுறை தெரியாமல் மண்மூடிப்போக”

 

என்று சமுதாய இருளை உண்டாக்கும் இத்தகு கொள்கைகளை ஏற்கும் மார்க்கங்கள் எல்லாம் வழிதுறை தெரியாமல் மண்மூடிப்போக வேண்டும் என சபிக்கிறார் வள்ளலார்.

 

அருட்பாவில் நூற்றுக்கணக்கான இடங்களில் சாதிகளை, சமயங்களை மதங்களை அவர் கண்டிதிருப்பதிலிருந்து அவர் எந்த அளவு இந்த பிரிவினைகளுக்காக வருந்தினார் என்பது புலப்படுகிறது சாதியை இருட்சாதி எனவும் சாத்திரங்களை குப்பைகள் எனவும் அவர் கண்டனம் செய்வதிலிருந்து ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாக அவரை 19ம் நூற்றாண்டிலேயே காணமுடிகிறது.

 

தொழில் ஒழுக்கம் பற்றி சாதிகளும், தத்துவ ஒழுக்கம் பற்றிச் சமயங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று சொல்லும் வள்ளலார் இந்த சாதிகளையும், சமயங்களையும் அறவே விட்டொழிக்க வேண்டும் என்கிறார். அப்படி விட்டொழித்தால் தான் ஒருமைப்பாட்டுணர்வு ஓங்கும் என்பது அவர் எண்ணம்.

 

“கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக்

காதலித் தொருமையில் கலந்தே

உள்ளவாறிந்த உலகெலாம் களிப்புற்

றோங்குதல் என்றுவந் துறுமோ ….(4078)

 

என்று வேட்கை கொள்கிறார்.

 

மக்கள் தங்கள் மதங்களை, சாதிகளைக் காதலிப்பதை விட்டு விட்டு அருள்நெறியைக் காதலிக்க வேண்டும் என்கிறார். அப்படி உலக மக்கள் அனைவரும் அருள் நெறியைக் காதலித்தால் ஒருமை என்ற உயர்ந்த எண்ணம் எல்லோர் மனங்களிலும் ஓங்கும் அன்றோ!

 

“குலத்திலே சமயக் குழியிலே நரகக்

குழியிலே குமைந்துவீண் பொழுது

நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து

நிற்கின்றார் நிற்க நான் உவந்து …. (4729)

 

என்று வேதனையுடன் அவர் எண்ணங்கள் வெளிப்படுகிறது.

 

குலங்கள், சமயங்கள் என்கிற பிரிவுகள் மானுட சமுதாயத்தை நரகக்குழியிலே தள்ள வந்தவை என்கிறார். மக்கள் இந்த உண்மையை உணராது இன்னும் ஏமாந்து நிற்கின்றார்கள். மனித சமுதாயம் இக்கொடுமையில் இன்னும் உழலுவது நாம் காணும் காட்சியன்றோ! வள்ளலார் காலத்துக்கு முன்னும் அவர் காலத்திலும், அவருக்கு பின்னும் இன்று வரை இந்த மதச்சண்டைகள், சாதிச் சண்டைகள் தொடர்ந்தவாறே உள்ளது. அந்த சண்டைகளின் வாயிலாக ஏராளமான விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகிக் கொண்டே உள்ளன. இத்தகைய சண்டை சச்சரவுகள் நீங்க வேண்டும். இந்த சழங்குகள் ஒழிய வேண்டும். சாதிப் பற்று, சமயப்பற்று, விலகி மக்கள் ஒருவர் உள்ளத்தை ஒருவர் பற்ற வேண்டும் என்பதும் அதனையும் தாண்டி அனைத்து உயிர்குலத்தையும் அரவணைத்து வாழ வேண்டும் என்பதும் அவர் அவா. அவர் கனவு.

 

“மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது

வருணாசிரமம் என்னும் மயக்கமும் சாய்ந்தது”

 

என்று அவர் பாடுகின்றபோது அவர் கனவுகள் பலித்துவிட்டதாகக் கற்பனையில் சஞ்சாரம் செய்கிறார். அந்த கனவுகள் பலித்தால் அன்றி உலகம் உய்ய வழியே இல்லை.

 

“சாதி சமயச் சழக்கை விட்டேனடி – அக்கச்சி

அருட்சோதியைக் கண்டேனடி அக்கச்சி”

 

என்பவையும் அருட்பா வரிகளே. அருட்பெருஞ்சோதியான இறைதரிசனம் காண வேண்டுமானால் சாதி, சமய சழக்குகள் என்னும் இழிவுகளை கலைதல் அவசியம்.

 

“இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்”

 

என்று வேண்டுகோள் வைக்கிறார் அவர். உலகம் சமயம் தவிர்த்த சன்மார்க்க உலகமாதல் வேண்டும். பேருபதேசம் என்கிற திருஅருட்பா உரைநடைப்பகுதியில் வள்ளலார் கூறும் கூற்றைக் கவனிப்போம். இது ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் 7 ஆம் நாள் வடலூர் மேட்டுக்குப்பத்தில் சுத்த சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்து வள்ளலார் ஆற்றிய உபதேசத்தின் ஒரு பகுதி.

 

“இங்குள்ள நீங்கள் எல்லாரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள்…” என்று ஆரம்பிக்கும் வள்ளலார் மேலும் தொடர்வது

 

“சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம்,சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தை பற்றி குழுவுக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனனில் அவைகளிலும் அச்சமய மதங்களிலும் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமேயல்லாது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்று கொள்கின்றதற்கு முடியாது. ஏனனில் நமக்கு காலமில்லை. மேலும் இவைகளுக்கெல்லாம் சாட்சி நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா? அப்படி லட்சியம் வைத்ததற்கு சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கின்ற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்கு கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால் அப்போது எனக்கு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

 

இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலை மேலேற்றி இருக்கிறார். இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்கள்களானால் என்னைப்போல் பெரிய லாபத்தை பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கிவிட்டதென்றாலோ அந்த லட்சியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்கு தூக்கிவிட்டது யாதெனில்… என்னையேறா நிலை மிசையேற்றி விட்டது யாதெனில் தயவு… தயவு என்னும் கருணை தான் என்னைத் தூக்கிவிட்டது.

 

அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும். தயவு வந்தால் தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டங்களுக்கு அண்டங்கள் அப்பாலும் கடந்திருக்கிறது. அது ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப் போல் ஒருமையுடனிருங்கள்” (பேருபதேசம்)

 

மேற்கண்ட உபதேசத்திலிருந்து அவருடைய மனம் நமக்குத் தெரிகிறது. தெய்வங்கள் என்று ஒவ்வொறு சமயமும் குழு உக் குறியாக ஒன்றைக் காட்டிக் கொண்டு உள்ளது. அதனையும் அந்தத் தெய்வங்களைக் காட்டும் சமயங்களையும் பற்றுவதால் நாம் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியாது. மேலும் அவைகள் ஒருமைக்கு ஊறு விளைவித்து நம்மிடம் தயவு என்னும் குணம் வராமல் செய்கின்றன என்பது தெரிகிறது. கருணையும் சிவமே பொருள் எனக்காணும் காட்சியும் பெறுக… என்கிற பாடல் வரிகளிலிருந்து கருணையே சிவம், அதைப்போல் சிவம் என்பது கருணை என்பதை வள்ளலார் நமக்கு உணர்த்துகிறார்.

 

வள்ளலார் வலியுறுத்தும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை வரவேண்டுமானால் சமயங்கள், மதங்கள், வருணங்கள், சாதிகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும். ஏனென்றால் ஆன்மநேயத்திற்கும், மனித நேயத்திற்கும் இவைகள் தடைகள் எனலாம்.

 

அவருடைய சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பத்தில் எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமான ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும் என்கிற அறைகூவலை மானுட சமுதாயத்திற்கு விடுக்கின்றார். மேலும் சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பத்திலும்

 

“”சிறுபருவத்தில் ஜாதியாசாரம் ஆசிரம ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தை பொய்யென்று அறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து அப்பருவம் ஏறுந்தோறும், ஏறுந்தோறும் எனதறிவை விளக்கஞ்செய்து செய்து என்னை மேனிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத்து அருளினீர்” என்று எழுதுகிறார். இதிலிருந்து அடிகளாருக்குச் சிறுவயதிலேயே சாதி, ஆசாரம் முதலியன இல்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் அருட்பாவில் சிலவற்றைக் காண்போம்.

 

“பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள் பல

பேதமுற் றங்கும் இங்கும்

பேருற் றிறந்துவீண் போயினார்” – (3677)

 

என்று பாடுகிறார் எவ்வளவு உண்மையான வாசகங்கள் இவை.

பேய்ப்பிடித்தாட்டுகின்ற மதங்களால், இந்தப் பிள்ளை விளையாட்டுகளில் பலியாகும் மானுட உயிர்கள் கணக்கில்லாதவை. மதப்போரில் இறந்து வீண்போனவர்கள் கோடிக்கணக்கில் இருக்கும். இதனைக் கண்டித்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அடுக்கடுக்காக ஆறாம் திருமுறையில் சீர்திருத்த சிந்தனை விதைகளைத் தூவிச் சென்ற ஆன்மிகவாதி வள்ளலாரைப் பின்னாளில் வந்த தந்தை பெரியாரோடு ஒப்பிட வேண்டிய காலகட்டம் இது.

 

உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரை மண்ணில் பல சமயங்கள் பல காலகட்டங்களில் தோன்றியுள்ளன. இன்னும் தோன்றக்கூடும். தோன்றிய சமயங்களில் பல அழிந்து விட்டன. பல அழிந்து வருகின்றன. எவ்வளவு சமய நெறிகள் தோன்றி மறைந்தன என எவருக்கும் தெரியாது.. மதங்கள் மனிதனைப் படைக்கவில்லை. மனிதனே மதங்களைப் படைத்துள்ளான்.

 

அந்த மதங்கள் அனைத்தும் தத்தம் கடவுளைக் காட்டிச் செல்வதோடு அந்தந்த மதங்களுக்கு என்று கொள்கைகள், மட்டுமில்லாது மற்ற மதத்தைக் குறை கூறித்தான் வளர வேண்டியுள்ளது. இதனால் சமயப் போர்கள் ஏற்ப்பட்டன. எண்ணாயிரம் சமணர்களை வாதில் வென்ற சம்பந்தர் கழுவேற்றிக் கொன்றார் என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. இயற்கைச் சீற்றங்களான புயல், வெள்ளம், மழை, இடி, பூகம்பம், சுனாமி, மின்னல் முதலியவற்றால் கோடிக்கணக்கான மனிதர்கள் மாண்டார்கள் எனில் அதற்கு அடுத்து மதப்போர்களிலும் கோடிக்கணக்கான மனிதர்கள் மாண்டுள்ளனர்.

 

ஒரு மதத்தில் ஏதோ குறை இருக்கின்ற காரணத்தால் தான் அல்லது அதனைப் பின்பற்ற இயலாத காரணத்தால்தான் காலப்போக்கில் அந்த மதத்திற்கு ஒரு மாற்று மதம் உருவாகியுள்ளது. இப்படியே இன்றைக்கு உலகில் பல மதங்களும் சமயங்களும் உண்டாயிற்று.

 

“ஆறுகோடியாம் சமயங்கள்” என்று வள்ளலார் சுட்டிக்காட்டுவதிலிருந்து கோடிக்கணக்கில் சமயங்கள் உள்ளன என்று தெரிகிறது.ஆன்மாவால் ஒன்றுபடும் அகில அண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வுக்கும், அகில் உலக சகோதரத்துவத்திற்கும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க சங்கத்தை விட்டால் வேறு வழியில்லை. இவர் தந்த இந்த சுத்த சன்மார்க்க நெறியைச் செந்நெறி. பொதுநெறி, கருணைநெறி, ஞானநெறி, தயவுநெறி என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படிப்பட்ட சாதிவேறுபாடு, சமய வேறுபாடு இல்லாத உயிரை உயிராய் மதிக்கும், உயிருக்குள் உடவுளைக்காணச் செய்யும் உயரிய நெறியைத் தந்தை பெரியார் எப்படி எதிர்ப்பார்?

 

அவர் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் சனாதன இந்து சமயத்தையும் அது போன்று மற்ற சமயத்தில் உள்ள குறைகளையும் கண்டிக்கிறார்.

 

வள்ளலாரின் ஜீவகாருண்ய சமயத்தைத் தந்தை பெரியார் மட்டுமல்ல, எவரும் எதிர்க்க முடியாது. அதனால் தான் பெரியாரும், வடலூர் சென்று வள்ளலார் கட்டிய சத்திய ஞான சபையைப் பார்த்துள்ளார்.

 

வள்ளலாரின் சத்திய ஞானசபையைப் பார்க்க விழைந்த பெரியார் அங்குச் சென்றார்.

 

ஞானசபையின் முகப்பில் எழுதியிருந்த “புலை, கொலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்” என்று எழுதியிருந்த வரிகளைக் கண்ணுற்ற பெரியார் உள்ளே செல்லாமல் நின்றுவிட்டார். அவருடன் வந்த இயக்கத் தொண்டர்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் வள்ளலாரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கூறியும் உள்ளேச் செல்ல மறுத்து வெளியில் இருந்தவாறே ஞானசபையைப் பார்த்து வந்துள்ளார்.

 

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சாதி, மதங்களைப் பற்றிக் கூறுகின்ற கூற்றுகளை ஆராய்வோம். “இந்தச் சாதியானது கடவுள், மதம், இவ்விரண்டையும் ஒட்டி எழுந்துள்ள சாத்திரம், புராணம் ஆகிய எல்லாவற்றிலும் நிலை கொண்டு நிற்கிறது. இந்து மதக்கோயில்களின் அமைப்பு சாதிவேருபாட்டைக் கோயில் உள்ளவரையிலும் நிலை நிறுத்தி வைக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது” என்னும் பெரியார்.

 

“இந்துமதக் கோயில்களின் உள்ளே பல சுற்றுகள் இருக்கின்றன. கோயிலின் உள்ளே கருவறை என்ற ஒன்று தனிக்கோயிலாக இருக்கின்றது. இன்னின்ன்ன சாதியார் இன்னின்ன சுற்றுகளில் நின்று கும்பிடவேண்டும் என்பதற்காகச் சுற்றுகள் உள்ளன. கருவறை பார்ப்பனப் புரோகிதர்களுக்கு உரிய இடம். பார்ப்பனச் சாதியாரும், சூத்திரரும் இவ்வாறு கோயிலுக்குள்ளே நின்று சாமியை வழிபடுவர். இவர்களில் சேராத பஞ்சமர்கள் அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் வெளியே நின்று கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டுச் “சாமி! எனக்கு அடுத்த பிறவியில் உயர்ந்த சாதியாகப் பிறக்க வரங்கொடு” என்று வேண்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று பெரியார் கூறுகிறார். சாதிக் கொடுமைகளுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மதம், அந்த மதம் காட்டும் கடவுள் இவைகளை பெரியார் ஓயாது எதிர்த்தார்.

 

“A search in secret India” என்னும் வெளிநாட்டார் எழுதிய நூலில் சங்கராச்சாரி கொடுத்த பேட்டி வெளியாகியிருக்கிறது. அதில் எந்த விலை உயர்ந்த சோப்பு போட்டு குளித்தாலும் தாழ்த்தப்பட்டவனாகப் பிறந்தவனின் தீட்டு நீங்காது என்று திருவாய் மலர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள இப்பேட்டியே அவரது சாதிவெறியைக் காட்டுவதாக உள்ளது. (17.7.1981 விடுதலை)

 

ஒரே நாட்டு மக்கள் பிறவியில் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் தான் இருக்கின்றதே தவிர வேறு எங்கும் இல்லை என்னும் பெரியார், இதனால் மனிதரில் சிலர் எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றனர் என்பதை எவரும் புரிந்து கொள்ளும் வகையில் பேசுகிறார்.

 

“சாதியின் கொடுமையால், நாற்றமெடுத்த மலத்தை விட மனிதன் கேவலப்படுத்தப்படுகிறான். இது உண்மை. வாய்ப்பேச்சாக நான் சொல்லவேயில்லை. எப்படி என்றால் எப்படி மல உபாதைக்கு சென்றவன் எப்படி அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தை காலில் மிதித்துவிட்டால் அந்த காலை மட்டும் தண்ணீரை விட்டுக் கழுவிவிட்டால் அந்த குற்றம் போய்விட்டதாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட்டால் அவரைத் தொட்டால் ஏற்படும் தோஷம் தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர நனையக் குளித்தாலொழியப் போவதில்லை என்கிறார்கள். ஆகவே மலத்தினை விட மனிதன் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறான் என்பதை பாருங்கள். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படுகின்ற கெடுதலென்ன? தோஷமென்ன? குற்றமென்ன? ஏதுமில்லை. ஆனால் பிறகு ஏன் தோஷம் கூறப்படுகிறது? ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்வதற்காகவே கூறப்படுகிறது. இதைவிட வேறு ரகசியம் இல்லை. (திராவிடன் 5.10.1929) என்ற பெரியாரின் எண்ணம் எவரையும் சிந்திக்க வைத்தது. சாதி உணர்வுகளுக்கு அடிப்படை, மத உணர்வுகளுக்கு அடிப்படை கடவுள் உணர்ச்சி என்பதால் அதனை வேரோடு வேரடி மண்ணோடு அழிக்க முனைந்த பெரியார் “கடவுளாவது வெங்காயமாவது” என்றார். அது ஒரு கற்பனை என்றார்.

 

குடியரசு நாளிதழில் அவர் கொடுக்கும் விளக்கத்தைப் பர்ப்போம்.

 

மனிதனுக்கு கடவுள் உணர்ச்சி தோன்றிய காலந்தொட்டே இந்த நாட்டில் மேல் சாதி, கீழ்சாதி உணர்ச்சி தோன்றிவிட்டது. கடவுள் பேராலேயே மேல்-கீழ் சாதி உணர்ச்சிகள் காட்டப்பட்டிருக்கின்றன. இந்து மதம் என்பது வைணவத்திலாவது, சைவத்திலாவது சாதிப்பிரிவு, உயர்வு தாழ்வு காணப்படாத கடவுள்களோ, அவதாரங்களோ, திருவிளையாடல்களோ,கடவுள்களைக் காட்டிய பெரியோர்களோ, தத்துவம் புராணங்களோ இதிகாசங்களோ ஏதாவது ஒன்றைக் காட்ட முடியுமோ? 64 நாயன்மார்களும் 64 சாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள். 12 ஆழ்வார்களும் 12 சாதிக்காரர்களாகப் பிறந்திருக்கிறார்கள். இந்து மதத்திற்கு ஆதாரமான, சட்டமான மனுதர்ம சாஸ்திரம் முதலியவைகளை எடுத்துக் கொண்டால் அவைகளில் அளவில்லாத சாதிகளும், அதற்கு தராதம்மியமும் காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது என்ற விளக்கத்தில் ஆதாரபூர்வமாக மக்களின் பகுத்தறிவு உனர்ச்சியை தூண்டுகிறார்.

 

இப்படி இந்து மதத்தினை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கும் தந்தை பெரியார் எந்த மதம்? குடியரசு நாள் 18.1.1945ல் வந்த அவரது தலையங்கம் படித்தால் தெரியும்.

 

“இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது? என்று கேட்கலாம். உங்களுக்கு துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரைச் சொல்லிக் கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும் இழிவும் அணுகாதோ அதைச் சொல்லுங்கள். அப்படிச் சொல்லிக் கொள்வதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்குமானால் நீங்கள் திராவிடர்கள் என்றும், திராவிட சமயத்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாம். அதிலும் கஷ்டமிருந்தால் சமரச சமயத்தால் மனித சமுதாய ஜீவகாருண்ய சமயத்தார் என்று சொல்லிக் கொள்ளலாம். பொருள் இல்லாததும், பித்தலாட்டமானதும், இழிவையும் அந்நிய ஆதிக்கத்தையும் சுரண்டலையும் தருவதுமான ஒரு சுயநல கற்பனையான இந்து மதத்தின் பேரைச்சொல்லிக் கொள்வது என்பது வெட்கக்கேடான காரியமாகும்” என்று எழுதுகிறார். நன்றாக ஆராய்ந்து சிந்தித்து நம்மை திராவிட சமயம் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று சொல்பவர் அதில் சிரமம் இருப்பின் சமரச சமயம் அல்லது ஜீவகாருண்யச் சமயம் என சொல்லிக் கொள்ளலாம் என வலியுறுத்துகின்றார். சமரச சமயம் என்பதும் ஜீவகாருண்யச் சமயம் என்பதும் வள்ளலார் கண்ட பொது நெறி என்பது அனைவருக்கும் தெரியும். வள்ளலாரைவிடச் சமரசத்தையும், ஜீவகாருண்யத்தையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் வலியுறுத்தியவர்கள் உலகில் வள்ளலாருக்கு முன்பும், பின்பும் யாரும் இல்லை எனலாம். இனிவரப்போவதும் இல்லை. தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் வள்ளலாரின் சமயத்தை ஜீவகாருண்ய சமயம் என சுட்டிக் காட்டியதை இவ்விடத்தில் நினைவூட்ட ஆசைப்படுகிறேன். வள்ளலாரின் ஜீவகாருண்ய சமயத்தில் தான் பொருள் உண்டு. அதாவது அன்பு, அறிவு என்கிற இரண்டு அகத்து உறுப்பு உண்டு. இம்மார்க்கத்தில் பித்தலாட்டம் இல்லை. எந்தப் பிரிவினையும் இல்லை. அதனால் இழிவும் இல்லை. எவருடைய ஆதிக்கமும் இல்லை. சுரண்டலும் இல்லை. வள்ளலார் காட்டியுள்ள இந்த நெறி பெரியாரும் மதிக்கும் கொள்கையாகவே உள்ளது. ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும், சாதியை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதத்காகவும் தான் தந்தை பெரியார் தனது இறுதி மூச்சுவரை உழைத்தார். உயர்வு, தாழ்வு நிலை எந்த இடத்தில் இருந்தாலும் எந்த மதத்தில் இருந்தாலும் அவர் கண்டிக்கத் தவறியதில்லை. சாதி உட்பிரிவுகள் இந்து மதத்தில் அதிகமாகப் புரையோடி விட்டதால் இந்து மதத்தை மட்டும் மிகவும் கடுமையாகத் தாக்குகிறார். இந்து மதத்தைப் பற்றிப் பெரியார் அடிக்கடி கூறியது உலகத்தில் இந்து மதத்தில் மத,வேத,சாஸ்திர, புராண, இதிகாச ஆதாரங்களில், மதக் கடவுள்களிடத்தில், மத சம்பந்தமான கற்புக்கரசிகள் முதலிய பெண்களிடத்தில் காணும்படியான பொய், பித்தலாட்டம், ஏமாற்றம், விபச்சாரம், பலாத்காரம், ஆகிய காரியங்கள் நடப்புகள் வேறு மதத்தில், மத ஆதாரங்களில் காணப்படுவதில்லை.”

 

“இந்து மதம் என்றால் என்ன? எப்போது உண்டாயிற்று? அதன் பிரமாணம், தத்துவம், ஆதாரம், என்னவென்று யாரையும் கேட்டுக் கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக் கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம். உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரா ஒருவருக்கொருவர் சண்டையிடப் பழக்கப்பட்டு இருக்கிறோம். இதில் ஒரு கடவுள் பெரிது, ஒரு கடவுள் சிறிது என்றும் ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும் ஒரு மதத்துக்காரன் மற்ற மதத்துக்காரனை பார்ப்பது பாவமென்றும், சண்டை இடுகிறோமேயல்லாமல் இந்து மதம் என்றால் என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை. இந்து மதம் எப்போது உண்டானது என்றால் அது அனாதிமதம், வேதகாலம் தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் என்பது எப்போது யாரால் உண்டானது என்றால் அதுவும் அனாதியானது கடவுளால் உண்டாக்கப்பட்டது என்கிறார்கள். அய்யோ! வேதம் என்பது கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர் தானே. அதை நான் பார்க்கலாமா? என்றால் ஆகா! மோசம் வந்துவிடும் நீ பார்க்கக் கூடாது, நீ சூத்திரன், அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கி விட வேண்டும், படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும், யாராவது கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும் என்கிறார்கள்.”

 

“அது போகட்டும் இந்த இந்துமதம் என்ற வார்த்தையாவது நமது தமிழ் நூல்களில் எதிலாகட்டும் எங்கேனும் இருக்கிறதா? இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட தமிழ் நூல்கள் பல இருக்கின்றனவே, அவற்றில் ஏதாகினும் எந்த இடத்திலாகிலும் இந்து மதம் என்கிற வார்த்தை பெயருக்காவது இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை. இந்து மதத்தின் பெயரின் ரகசியமே நமக்கு தெரியவில்லை. இது எவ்வளவு மானக்கேடான நிலையாக இருக்கிறது? இந்து என்கிற வார்த்தை பெரிஷியன் பாஷையில்தான் வழங்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் என்னவென்றால் திருடன் என்பது பொருள். ஒரு சமயம் குறிப்பிடும் இந்து என்கிற வார்த்தைக்குப் பொருள் அது இல்லையென்று வைத்துக் கொண்டாலும் ஆராய்ச்சியாளர்கள் சிந்து நதிக்கரையில் ஆரியர்கள் முதன் முதல் நமது நாட்டில் குடியேறினவர்களாதலினால் அந்த நதியின் பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டு “சிந்து” என்பது “இந்து”வாகி “இந்தியா” என்று மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக ஆங்கில அகராதிகளிலும் இந்து என்றால் சூரியன் என்றும் இந்து மதம் என்றால் பார்ப்பன மதமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆங்கில அகராதிதான் அப்படி சொல்கிறது என்பதற்காக அதன் மீது நாம் குறை சொல்வதாக இருந்தாலும் ஆரியர்களாலேயே எழுதப்பட்டதும், ஒப்புக் கொள்ளப்பட்டதும் ஆன வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம், இவைகளின் பாஷியம், புராணம் என்பனவற்றில் ஒரு ஆதாரத்திலாவது இந்து, இந்துமதம் என்ற வார்த்தைகள் கிடையவே கிடையாது என்று தந்தை பெரியார் கூறுகிறார். இதில் உண்மை உள்ள காரணத்தினாலேயே ஆரியர் இனத்தில் பிறந்த அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அதனை தெளிவாகவும், விரிவாகவும் எழுதி உள்ளார். இதே செய்தியை தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு கூட்டத்தில் கூறியதால் இந்துமத அமைப்புகள் கடுமையாகக் கலைஞரை விமர்சனம் செய்தன. இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தில் உள்ள இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியே அண்ணல் அம்பேத்காரும் புத்தமதத்தை தழுவிய வரலாறு அனைவருக்கும் தெரியும்.

 

எல்லா மதத்திலும் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் பெரியார் ஓரளவு ஏற்றுக் கொண்ட மதங்கள் புத்தமதமும், இஸ்லாமும் ஆகும். இதில் எந்த மதத்தைத் தழுவினாலும் ஒரு குறிப்பிட்ட மதத்துக்காரன் என்கிற முத்திரையோடு மற்ற மதத்துக்காரணைக் குறை கூற நேர்வதால் மதங்களை தழுவாதப் பொதுமனிதனாக வாழச் சொல்லுகிறார் பெரியார். நமது சமுதாயம் இனிமேலும் சாந்தியோடு வாழ வேண்டுமானால் மதம் அற்ற ஒரு புது உலகத்தை நாம் சிருஷ்டிக்க வேண்டும் என்று விடுதலை இதழில் எழுதுகிறார். இதையே வள்ளலார்,

 

‘சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப

நீதி இயல் ஆச்சிரம நீட்டென்றும் – ஓதுகின்ற

பேயாட்டமெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்

வாயாட்டம் தீர்ந்தனவே மற்று” – (5508)

 

என்று இந்தச் சாதி மத இழிவுகளைப் பேயாட்டம் என்று குறிப்பிட்டு பாடுவதோடு அவைகள் ஒழிந்து போகட்டும் என்று பாடுகிறார்.

 

மனித சமுதாயத்தில் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு ஏற்படும் இழிவு நீங்க வேண்டுமானால் மானத்தோடு மனிதன் வாழவேண்டுமானால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மதங்களை ஒழிக்க வேண்டும் என்றார் பெரியார்.

 

உங்களுக்கு ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் நீங்கள் மனிதத்தன்மை பெற வேண்டுமானால் சாஸ்திர, புராண சம்பிரதாயங்களிலும் மதங்களிலும் உங்களுக்குள்ள பற்றுதலை, பக்தியை நீங்கள் உடனே விட்டொழிக்க வேண்டும் என்று மேலும் அவர் விடுதலை இதழில் எழுதுகிறார். வள்ளலார் சுட்டிக்காட்டியது போல் ஒருமைப்பாட்டு உணர்வுக்கு ஊறு விளைவிக்கும் கொடிய ஆயுதமாக மதம் இருக்கின்ற காரணத்தால் அதனை நோக்கி அக்னிக்கணைகளைப் பேச்சாலும் எழுத்தாலும் எடுத்து வீசியவர் ஈரோடு இராமசாமி என்னும் பேரறிவுப் பெட்டகம்.

 

“ஒருவருக்கொருவர் உயர்வு – தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமை இல்லாமல் செய்திருப்பதற்கும் மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படாமல் பாழாவதற்கும் மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும் சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் கடவுள் என்பதும் அதன் சமயமும் சமயாச்சாரிகள் என்பவர்களும் அவரது பாடல்களும் நெறிகளுமே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்” என்று பெரியார் சொல்வதிலிருந்து நம் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாமல் மதம் என்னும் குறுகிய அமைப்பில் கிடந்து உழலுவது நியாயமா? என்று யோசிக்க வேண்டும்.

 

மதத்திற்கு அடிப்படைக் கடவுள் கொள்கை ஆக இருப்பதால் மதத்தை எதிர்க்கும் பெரியார் கடவுளையும் எதிர்க்கத் துணிந்தார். கடவுள் என்று ஒட்டுமொத்தமாக சனாதனத்தின் வேரிலேயே வென்னீர் ஊற்றினார். கடவுள் இல்லை என்ற இரண்டு வார்த்தையிலேயே கடவுளை ஒட்டிக் காட்டப்படும் மதம், சமயம், வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம், இதிகாசம் முதலியன எல்லாமே இல்லை என்றாகிவிடும் ஆணிவேரான கடவுளை அசைத்து வேரோடு பிடுங்கிவிட்டால் மேலே நிற்கும் கிளைகளான மற்றவைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என நினைத்துத் தான் “கடவுள் இல்லை, கடவுள் இலை, கடவுள் இல்லவே இல்லை” என அழுத்திச் சொன்னார். திரும்பத் திரும்பக் கூறினார். ஏன் அப்படி அவருக்கு கடவுள் மீது வெறுப்பு? அதற்கான அவர் விளக்கத்தை நோக்கினால் அது விளங்கும்.

 

முதலில் சாதி வித்தியாசம் என்கிற கொடுமைத்தன்மை என்பது இந்த நாட்டைவிட்டு ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்ற முடிவு தெரிந்து விட வேண்டும். இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு கீழோ மேலோ சாதி என்பது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்கு மேல் சாதி வித்யாசத்திற்கு ஆதாரமாயுள்ளவைகளை அடியோடு அழிக்க முயல வேண்டும். அப்படி செய்யாமல் உயர்வு தாழ்வைப் போக்கிவிடலாமென்று கருதுதல் நுனிமரத்தில் நின்று கொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதனின் முட்டாள் செய்கையையே ஒக்கும். சாதி ஆச்சாரம் என்பவை மதம் என்னும் மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சாதியை மரத்திலிருந்து பிரித்து கொல்ல வேண்டும். இப்படி பிரிப்பதற்கு முடியாதவரையில் சாதியும் மதமும் ஒன்றோடொன்று இறுகப் பின்னிக் கொண்டிருக்குமேயானால் அந்த இரண்டையும் வீழ்த்தியேயாக வேண்டும். முன்னிருந்த அந்த உயர்ந்த சாதிக் கபடர்கள் அவ்வளவு தந்திரமாக ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் சாதியையும் மதத்தையும் பிணைத்துப் பின்னிக் கொண்டிருக்கும்படி இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால் சாதியை அழிக்கத் தலைபடுகையில் மதமும் வெட்டப்படுகிறதே என்று பயப்படாமல் சாதிமரத்தையும், மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்து சாம்பலாக்க வேண்டியது தடுக்க முடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. அதாவது மதமானது வேதம், புராணம் என்பவைகளுடன் கட்டிப் பிணைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வேதம், புராணங்களில் இருந்து மதத்தை பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டுப்பலமாக இருந்தால், இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியது தான். ஆனால் இந்த வேதம் கடவுளுடன் சேர்த்து கட்டிவைக்கப்பட்டுருக்கிறது. இதிலும் பிரிக்க முடியாத பிணைப்பு இருந்தால் அந்தக் கடவுள் என்பதன் நிலையிலும் கை வைத்துத் தான் ஆக வேண்டியிருக்கிறது. வேதத்தை இழுத்தால் கடவுளுக்கும் அசைவு தான் கொடுக்கும். இதில் தான் பெருத்த சங்கடப்படக் கூடும். கடவுளை அசைப்பதா என்று பயப்படக்கூடாது. எனவே சாதி, மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழித்துத்தான் ஆகவேண்டும். இவற்றில் ஒன்றைவிட்டு ஒன்றை பிரிக்க முடியாமல் எல்லாவற்றையும் சேர்த்து கொளுத்தும் போது, உண்மையில் ஏதாவது சக்தி இருந்தால் அது அழியாது. இப்படி நாம் சாதி வித்யாசத்தை ஒழிக்க முற்படுகையில் மதமென்பதும் ஒழிந்துபோகுமே என்றால் அந்த மதம் நமக்கு வேண்டாம். அது இப்போதே அழிந்து போகட்டும். மதத்தை பொசுக்கும் போது வேதமும் பொசுங்கிப் போவதாய் இருந்தால் அந்த வேதம் என்பதும் இப்போதே வெந்து போகட்டும். வேதத்தை ஓட்டும் போது கடவுளும் ஓடிவிடுவாரென்றால் அந்த கடவுள் என்பதும் இந்த நிமிஷத்திலேயே ஓடிவிடட்டும். அப்பேர்ப்பட்டக் கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம்” இப்படி பெரியார் தந்துள்ள விளக்கத்தை படிக்கின் அவர் ஏன் கடவுளை மறுத்தார் என்பது நமக்குத் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

 

வள்ளலார் கடவுள் என்ற ஒன்றை மட்டும் விட்டு விட்டு வைத்து மற்ற சாதி, சமயம், மதம் இவற்றை மிகவும் கடுமையாக எதிர்த்தார். வேதம், புராணம், சாத்திரம், இதிகாசம் என்பவைகளில் உண்மையில்லை என மறுத்தார். அதாவது சாதி, சமயத்திடம் காட்டிய வேகத்தில் கொஞ்சம் குறைத்தே வேதத்தின் மீதும் புராணத்தின் மீதும் வெறுப்பு காட்டினார். வள்ளலார் கடவுளை வெறுக்கவில்லை. வள்ளலார் கண்ட அந்தக் கடவுள்களும் தந்தை பெரியார் சுட்டிக்காட்டும் கோயிலுக்குள் இருக்கும் கற்சிலைகள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதை விரிவாக “கடவுள்” என்ற தலைப்பில் காண்போம். முன்னிருந்த அந்த உயர்ந்த சாதிக் கபடர்கள் இவ்வாறு தந்திரமாக மேற்சொன்ன கடவுளையும், வேதத்தையும், புராணத்தையும், மதத்தையும், சாதியையும், ஒன்றோடொன்று பின்னி வைத்திருக்கின்றனர் என்றார் பெரியார். வள்ளலார் இதையே தன்னுடைய பேருபதேசத்தில் தெய்வத்தின் உண்மைநிலை அறியாது அப்படியே கண்களை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் வல்லவன்.அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார். ஆனால் அந்த பூட்டை உடைக்க வந்தவர் தான் வள்ளலார். அவர் கொஞ்சம் உடைத்தார். தந்தை பெரியார் உடைத்தது மட்டுமின்றி அதை இருந்த இடம் தெரியாமல் நொறுக்கிவிட்டுச் சென்றார்.

 

கடவுள் ஒழிந்தால்தான் சாதி பேதம் ஒழியும் என்று நினைத்தவர் பெரியார். சாதி பேதம் ஒழிந்தால் தான் வள்ளலார் வலியுறுத்திய சமதர்ம சமுதாயம் அமையும். அந்த சமதர்ம சமுதாயத்தையே பெரியாரும் விரும்பினார். எல்லா வகையிலும் சமதர்ம சமுதாயம் காண விழைந்தவர்கள் வள்ளலாரும், பெரியாரும், அறிவால் ஒழுக்கத்தால், செல்வத்தால், படிப்பால் அனைவரும் ஒரே நிலை அடைய விழைந்தவர்கள் இருவரும்.

 

நம் நாட்டிற்கு இன்று முதலில் சாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் சமம் என்கிற சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது. சாதி,பேதம், பிரிவு, ஆகியவை ஒழிந்தால் தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் வாழமுடியும். பொருளாதார பேதத்திற்கும் சமூக சாதிபேத முறைதான் பெரிதும் காரணமாய், காவலாய் இருந்து வந்திருக்கின்றது. ஆகவே சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம் சாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகின்ற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி சாதியை ஒழிப்பதத்கு அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகின்றோம். மதத்தைப் பற்றியே மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்ரு சொன்னாலும் அதை நாத்திகம் என்று சொல்லிவிடுகின்றார்கள். அதனால் தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீர வேண்டி இருக்கின்றது.

 

வள்ளலாரிடம் இருந்து கடவுள் மறுப்பில் மட்டும் பெரியார் வேறுபட்டு நிற்கிறார். வேறுபட்டு நிற்பது மட்டுமல்ல வீறு கொண்டு எழுந்து கடவுள் பற்றிய கதைகளையெல்லாம் தவிடுபொடி ஆக்கினார். மனிதனை சுயமாக சிந்திக்க வைத்தார். பயத்தின் காரணமாக சிலர் மூடநம்பிக்கைகளில் மூழ்கும் முட்டாள்தனத்தைத் தனது அறிவு சக்தியை ஒன்று திரட்டி எதிர்த்துப் போராடினார். அதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார் என்று தான் சொல்லவேண்டும். அவரது கடவுள் மறுப்புப் பேச்சுகளைக்கேட்டால் பாமரனும் சிந்திப்பான். சிந்தித்துச் சிந்தித்துத் தன் மூளையால் ஒரு முடிவுக்கு வருவான். அப்படிப்பட்ட பேச்சுகள் அவருடையவை. ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போம்.

 

“நாம் ஏதாவது காரியம் செய்ய வேண்டும் என்றால் நம் மதத்தை கடவுளை, சாஸ்திர, புராண இதிகாசங்களை நெருப்புவைத்துக் கொளுத்தத் தயாராக வேண்டும். கடவுள்களை எல்லாம் சிதறு தேங்காய் போடவேண்டும். எல்லாக் கடவுள்களும் சாதியைக் காப்பாற்றும் கடவுள்கள். இது தவிர வேறு என்ன வேலை இந்த கடவுள்களுக்கு? எதற்காக சுப்ரமணியம் வந்தார்? (சுப்ரமணியன் ஆறுமுகம் வந்த கதையை பிரித்து பிரித்து அலசுவார், அதில் உள்ள புரட்டுகளை துணிவாகக் கூறுவார்) எதற்காக அவதாரம் எடுத்தார் விஷ்ணு? விஷ்ணு கொன்ற அத்தனைப் பேரும் சாதிக்கு விரோதிகள், சாதியை ஒழித்தவர்கள். பார்பனர்களை ஒழித்தவர்கள் – சாஸ்திர சம்பிரதாயங்களை அலட்சியம் செய்தவர்கள். அவர்களை ஒழிக்கத்தான் இந்த அவதாரம். அந்த அவதாரத்திற்குக் காரணம் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற அவதாரம் எடுத்தார் கடவுள் என்பதைத் தவிர எந்தக் கடவுளாவது உலகத்தைக் காப்பாற்ற வந்திருக்கிறார்களா?” என்று அவர் பேசும் போது ஒரு கணம் கேட்கும் எல்லோரையும் திகைக்க வைக்கிறது. அப்படியே சிந்திக்கவும் வைக்கிறது. “அய்யாவின் பேச்சென்றால் அதிரசம் தின்பதுபோல் கழகத்தவர்க்கு! அணுகுண்டு வெடித்ததைப் போல் கயவர்கட்கு!” என்ற கலைஞரின் கவிதை வரிகள் தான் இங்கு நினைவுக்கு வருகிறது. இந்த அத்யாயத்தின் இறுதிப்பகுதிக்கு வருவோம். சாதி இரண்டொழிய வேறில்லை என்ற அவ்வையார் இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர் என்றார். அவர் அந்த சாதி முறையை மிகக் கடுமையாகச் சாடவில்லை.

 

“சாதிகுலம் எனும் சுழிபட்டுத் தடுமாறும்

ஆதமிலிநாயனை அல்லலறுத்தாட் கொண்டு” என்றும்

“உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடலுலனவாய்க் கிடந்து தடுமாறும்”

 

என்று சாதிக்குலத்தையும், சமயத்தையும் மேம்போக்காக சுட்டிக்காட்டி பாடிய மாணிக்கவாசகரும் கூடச் சாதியையும், மதத்தையும் சமயத்தையும் கடுமையாகச் சாடவில்லை.

 

“சாத்திரம் பல சொல்லும் சழக்கர்கள், கோத்திரமும் குலமும்கொண்டு என் செய்குவீர்” என்றும்

“ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்

அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே”

 

என்றும் அப்பர் பாடியுள்ளார் என்று பெருமிதப்படுவார்கள் சைவர்கள். அதாவது மாட்டை வெட்டித் தோலுரித்துத் தின்கிற புலையனாக இருந்தால் கூட பரவாயில்லை. அவனையும் நான் கடவுளாக ஏற்பேன் என்று சொல்லி ஒரு நிபந்தனை போடுகிறார். சைவ சமயம் சுட்டிக்காட்டும் சைவ சமய அடையாளக் குறியான கங்கையை சடையில் தரித்த பரமசிவனை வணங்கினால் புலையன் என்றாலும் நான் அவனைக் கடவுளாக ஏற்பேன் என்கிறார். இங்கே சாதிவேற்றுமை நீக்கப்படும் வேகத்தை விட சமயப் பற்றின் வேகம் அதிகமாகத் தெரிகிறது. ஆனால் வள்ளலாரின் அருட்பாவைப் படிக்கின் அவர் காட்டும் சமரசம் அவாஇ ஆன்மிகத்தின் சிகரத்தில் கொண்டு வைக்கிறது.

 

எத்துணையும் பேதமுறா தெய்வுயிரும்

தம் உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ….. ( 5297)

 

இப்பாடலின் பொருள் விளக்காமலே புரியும். அணுவளவும் வேறுபாடு காட்டாது எல்லா உயிரையும் தன் உயிரைப்போல எண்ணுகின்றவர், மனத்தால் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் உள்ளத்தில் இறைவன் அறிவுருவமாய் நடம் புரிகின்றான். அப்படிப்பட்ட உள்ளம் உடையவர் திருவடிகளுக்கு ஏவல் செய்ய நான் காத்துக் கிடக்கிறேன் என்பது வள்ளலாரின் கூற்று. இறைவன் என்பவன் கைலாயத்தில் இருப்பதாகப் பலர் சொன்னபோது அந்த இறைவன் தூய நெஞ்சினார் உள்ளத்தில் நடம்புரிவதாகக் காட்டியிருப்பது ஒரு புரட்சியே.

 

வள்ளலாருக்கு முன்பு பலர் சமய சன்மார்க்கம் பேசியிருக்கிறார்கள் தாயுமானவர் உட்பட. ஆனால் சாதியை, மதத்தைச் சமயத்தை தவிர்த்த ஒரு சுத்த சன்மார்க்கத்தை உலகில் எவரும் சொன்னதில்லை வள்ளலாரைத்தவிர. இது ஒரு பொதுநெறி, கருணை நெறி, இதில் கடவுளைக் காண்பது முக்கியமல்ல, கடவுளை உணர்வதும், கடவுளாகவே ஆவதும் தான் முக்கியம். இப்படிப்பட்ட உயர்ந்த சீர்திருத்தத்தை 19ஆம் நூற்றாண்டில் ஆன்மிக உலகிலும் சமுதாயத்திலும் காட்டிச் சென்ற வள்ளலாரின் அடியொற்றியே பின்னாளில் பாரதி, பாரதிதாசன் போன்ற புரட்சி கவிஞர்கள் பாடல்கள் செய்தனர்.

 

“சாதிகள் இல்லையடி பாப்பா

குலம் தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்” என்று… பாரதியும்

“இருட்டறையில் உள்ளதடா உலகம்

சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே” என்றும்

“இந்த மண்ணில் எண்ணிலா மதங்கள்

கந்தக வீட்டிற்குள்ளே கனலின் கொள்ளிகள்” என்றும்

 

சாதியையும் மதத்தையும் குறித்து பாவேந்தன் பாடுகின்றான். இராமலிங்க சாமிகள் செய்த புரட்சியை, பாரதி, பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் மட்டுமின்றித் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற அரசியல் தலைவர்களும் பின்னாளில் சீர்திருத்தங்களாகக் காட்டிச் சென்றனர்.

 

“துடுக்குமிகுக் கொண்டலையும்

துணிவு மிக்க ஆரியர் தாம்

அடுக்கு சொல் அண்ணாவால்

அலறித்தான் சாகுதடா” என்று அண்ணாவைப் பற்றியும்

“பாராட்டி போற்றி வந்த

பழமைலோகம் ஈரோட்டு பூகம்பத்தால்

இடியுது பார்”

 

என்று தந்தை பெரியாரைப் பற்றியும் கலைஞர் எழுதியிருக்கும் கவிதைகள் இங்கு நோக்கத்தக்கவை.

 

மதங்கள் சாதிகள் கலைந்து வாழ்வோம் என்று இந்த அத்தியாயத்தை நிறைவு செய்யும் முன் மதங்கள் என்னென்ன செய்யும் என்று பெரியார் சுட்டிக்காட்டியதை ஒருதரம் நினைவு படுத்திக் கொள்வோம்.

 

1. மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி

2. மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி

3. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி

4. மதமே மனிதனுடைய சமூக சமதர்மத்துக்கு விரோதி

5. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்றதுணை

6. மதமே முதலாளி வர்கத்திற்குக் காவல்

7. மதமே சோம்பேரி வாழ்க்கைக்கு ஆதரவு

இப்போது புரிகிறதா மதங்களின், சாதிகளின் கொடுமை எந்த அளவு உள்ளதென்று. அதனால் தான் சமதர்மம் காண விழைந்த கம்யூனிஸ்ட்வாதி காரல்மார்க்ஸ் கூட மதத்தைப் போதைதரும் வஸ்து என்றார். ஆமாம் சொர்க்கம், நரகம் முதலிய இல்லாத கற்பனை செய்திகளைக் காட்டி அறியாத மக்களை எப்போதும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு போதை தரும் பொருள் என்று மதத்தை கூறினார் காரல் மார்க்ஸ். அதனையும் இவ்விடத்தில் சேர்ந்து சிந்திப்போம்.

 

“மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”

“பொறித்த மதம் சமயம் எல்லாம்

பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர்” – வள்ளலார்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.