குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

உலகநாடுகளில் சமச்டி இலங்கையின் சமச்டி தமிழர்பெறவேண்டிய சமச்டி பற்றி உருவாக்கம் பெற இக்கட்டுரை அடி

ப்படை தருகின்றது30.09.2018-“இன்றைய சமச்டி என்பது வெறுமனே பெயரளவில் நின்று விடாமல் எல்லா வகையான அரசமைப்பு முறைமைகளுக்குள்ளும் பரவியுள்ளது. ஆகையால் சமஷ்டி என்பது வெறுமனே பெயரால் மட்டும் வர்ணிக்கப்படும் ஓர் ஆட்சி முறையாக இருக்க முடியாது. மாறாக ஒரு நாட்டின் அரசமைப்பு சட்டத்தின் உள்ளடக்கத்தை ஆராய்கின்றபோது சமச்டியின் அடிப்படைக் குணாதிசயங்கள் காணப்படுமாக இருந்தால் அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும், பெயரே கொடுக்காவிட்டாலும் அது சமச்டி ஆட்சி முறையாகவே இருக்கும்.”

இவ்வாறு புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் சனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் 187ஆவது பிறந்தநாள் நிகழ்வில் ‘இன்றைய சமச்டியின் பரப்பளவு’ என்ற தலைப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய பேருரைக்கான தலையங்கம் சமச்டி பற் றியது. இச் சொல் ‘ ‘Federal’ என்கின்ற ஆங்கிலச் சொல்லைக் குறிக்கிறதாக தமிழிலே உபயோகிக்கப்பட்டு வந்திருந்தாலும் அது வட மொழி சார்ந்த ஒரு சொல்லாகும். பொருத்தமான தமிழ்ச் சொல் இல்லையென்றாலும் ‘கூட்டாட்சி’ அல்லது ‘இணைப்பாட்சி’ என்ற சொற்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

சமச்டியை தனது அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது யாப்பிலே காணப்படும் வட சொற்களை தமிழ் சொற்களாக மாற்றியபோது சமச்டியை இணைப்பாட்சி என்று மாற்றியது.

இந்த மாற்றத்தை எமது கொள்கையில் ஏற்றப்படுத்திய மாற்றமாக குற்றம் சுமத்தி, பிரிவினையைக் கோருகின்றோம் எனக் குறிப்பிட்டு எமக்கெதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விவரங்களை நான் பின்னர் எடுத்துக் கூறுவேன். ஆனால், தற்போதைக்கு இந்த உரையில் சமச்டி என்ற சொற்பிரயோகத்தையே நான் உபயோகிக்கப் போகின்றேன்.

தமிழரசு வழியில்

ஏனைய கட்சிகள்

சமச்டியை கொள்கையாகக் கொண்ட ஒரே அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அடிப்படைக் கொள்கையாகவும் அது இன்று பரிணமித்திருக்கின்றது.

எழுபது ஆண்டு  விடுதலை பெற்ற பின்னான வரலாற்றில் பல்வேறு தமிழ்க் கட்சிகள் வெவ்வேறு கொள்கைகளை முன்வைத்திருந்தாலும் கூட அனைத்து கட்சிகளும் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் உள்ள கொள்கையே தமது கொள்கையென்று ஏற்றுக்கொண்டுள்ளன. இப்படியான சந்தர்ப்பத்தில் சமச்டி ஆட்சி முறை என்றால் என்னவென்பதை தெளிவாக வரையறுத்துக் கூற வேண்டியது இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய கடமையென்று நான் கருதுகின்றேன்.

வரைவிலக்கணம்

சமச்டியென்ற அரசியல் கோட்பாட்டுக்கு குறித்தவொரு வரைவிலக்கணத்தைக் கொடுப்பது இயலாத விடயம். துல்லியமான குறித்த வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுக்க முடியாவிட்டாலும் அதனுடைய வரையறைகளையும் அதன் பரப்பளவுகளையும் சற்று விளக்கமாக முன்வைப்பதே இப் பேருரையின் நோக்கமாகும்.

சமச்டி ஆட்சி முறை இருப்பதாகக் கூறப்படுகிற ஏதேனும் இரண்டு நாடுகளுடைய ஆட்சி முறைகள் ஒரே மாதிரியாக இருப்பதாகக் காணமுடியாது. ஆனாலும், சமச்டியினுடைய சில அடிப்படைப் பண்பியல்புகள் ஒரு குறித்த நாட் டின் ஆட்சி முறையில் இருக்கின்றனவா? இல்லையா? என்று பரிசீலித்துப் பார்க்க முடியும். A V Dicey என்கின்ற மிகப் பிரபலமான அரசியல் அறிவியலாளருடைய கருத்துப்படி சமச்டி என்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பிராந்தியங்கள் அரச அதிகாரங்களை கையாள்வதற்கும் இடையிலான நடுநிலையைப் பேணுகின்ற ஓர் அரசியல் ஒழுங்கமைப்பாகும். அவருடைய கருத்துப்படி சமஷ்டியின் அடிப்படை குணாதிசயங்களாவன:-

1. அரசமைப்பு சட்டத்தினுடைய மீயுயர் தன்மை.

2. வெவ்வேறு அரச அதிகாரங்களை சமமானதும் மட்டுப்படுத்தப்பட்டதுமான நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிப்பது

3. அரசமைப்பு சட்டத்திற்கான வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழக்கப்படுதல் என்பதாகும்

இதேபோன்று K C Wheare என்கின்ற அறிஞரின் கூற்றுப்படி சமச்டி அரசமைப்பு என்பது அரசின் வெவ்வேறு மட்டங்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்படும் அதிகாரங்களின் மீது அவை ஒவ்வொன்றும் பூரணமான அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.

Ronald Watts, பொதுவான அரசாங்கமும் பிராந்திய சுயாட்சி அலகுகளும் ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளும் முறை என்று சமஷ்டியை வர்ணித்திருக்கின்றார். இவர் சமஷ்டி என்பது, அதிகார அலகுகள் ஒன்றிலிருந்து மற்றது தன்னுடைய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளாமல் நேரடியாகவே அரசமைப்பு சட்டத்திலிருந்து நேரடியாகவே இறைமையின் அடிப்படையில் பெற்றிருக்க வேண்டும் எனக் கருத்துரைத்திருக்கின்றார்.

Watts னுடைய சமச்டி கோட்பாட்டை எமது அரசமைப்புச் சட்ட நிபுணர் ரொகான் எதிரிசின்க பின்வரும் கூறுகளாகக் காண்பித்திருக்கின்றார்.

1. மக்கள் மீது நேரடியாக அதிகாரம் செலுத்தும் தகைமையுள்ள இரண்டு அரசாங்க அமைவுகள்: சில சுயாதீனங்களை உள்ளடக்கிய சட்டவாக்கல் மற்றும் நிறைவேற்றதிகாரங்களையும் நிதி வளங்களையும் இவ்விரு அரசாங்க அமைவுகளிடையே சட்டபூர்வமாகப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முறைமை.

2. மத்திய கொள்கைவகுப்பு நிறுவனங்களில் பிராந்தியங்களின் அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ளுதல். இது மத்தியிலிருக்கும் இரண்டாம் (மேல்) சபைக்கு பிராந்தியங்கள்/ மாகாணங்கள் தமது பிரதிநிதிகளை அனுப்புவதன் மூலம் செயற்படுத்தலாம்.

3. ஓர் எழுதப்பட்ட தன்னிச்சையாக மாற்றப்படமுடியாத மீயுயர் அரசமைப்புச் சட்டம்.

4. மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையிலான சர்ச்சைகளைத் தீர்க்கும் ஒரு நடுநிலையாளர்

5. மத்தியும் மாகாணங்களும் சேர்ந்து கையாளுகின்ற பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான பொறிமுறை.

ஒற்றையாட்சியின் கீழ்

13ஆவது திருத்தம்

இந்தக் குணாதிசயங்களின் அடிப்படை யில்தான் 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளைத் தன்னுடைய பல கட்டுரைகளில் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

13ஆவது அரசமைப்பு திருத்தம் 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது அத்திருத்தம் இலங்கையின் ஆட்சி முறையை ஒற்றையாட்சியிலிருந்து சமச்டி ஆட்சி முறைக்கு மாற்றிவிடுமென்று குற்றஞ்சாட்டி பலர் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாம் உறுப்புரை இலங்கையை ஓர் ஒற்றையாட்சி முறையென்று வர்ணித்திருக்கின்ற காரணத்தினால், நாட்டுமக்களின் வாக்கெடுப்பில்லாமல் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முடியாதென்பது அவர்களுடைய வாதம்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்ற குழாமில் ஒன்பது நீதியரசர்கள் இருந்தார்கள். அதில் நால்வர் 13ஆவது திருத்தம் ஓற்றையாட்சி முறையை மீறவில்லை என்று தீர்ப்பளித்தார்கள். வேறு நால்வர் 13ஆவது திருத்தம் இலங்கையினுடைய அரசமைப்பை ஒற்றையாட்சி முறையிலிருந்து சமஷ்டி முறைக்கு மாற்றிவிடுமென்று சாரப்படத் தீர்ப்பளித்தார்கள். ஒன்பதாவது நீதியரசரான பாரிந்த ரணசிங்க 13ஆவது திருத்தத்திலிருந்த இரண்டு பிரிவுகளை சுட்டிக்காட்டி அவை மாற்றப்படாவிட்டால் சர்வயன வாக்கெடுப்பு அவசியம் எனத் தீர்ப்பளித்தார்.

அந்த இரண்டு பிரிவுகளையும் மாற்றியமைத்த காரணத்தினால்தான் 13ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றக்கூடியதாக இருந்தது. மாகாண நிரலிலுள்ள விட யமொன்று சம்பந்தமாக மாகாணமொன்றின் இணக்கமில்லாமல் மத்தி சட்டம் இயற்றினால் அச் சட்டம் அக் குறித்த மாகாணத்திற்குப் பொருந்தாது என்கின்ற ஏற்பாடே மாற்றியமைக்கப்பட்டு அப்படியான சந்தர்ப்பத்தில் மத்தி 2/3 பெரும்பான்மையோடு அச் சட்டத்தை நிறைவேற்றினால் இணங்காத மாகாணத்திற்கும் அது பொருந்தும் என்கின்ற மாற்றம் செய்யப்பட்டது.

ஒற்றையாட்சியின் ஒரு குணாதிசயமாகிய மத்திய நாடாளுமன்றத்தின் மீயுயர் சட்டவாக்கத் தகைமை 13ஆவது திருத்தத்துக்குக் கொண்டுவரப்பட்ட மேற்கூறிய சிறிய திருத்தத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதன் காரணத்தினால் தான் ‘திவிநெகும’ சட்டத்திற்கு வடக்கு மாகாணம் இணங்கியிராத போதும் 2/3 பெரும்பான்மையோடு அது நிறைவேற்றப்பட்டு வடக்கு மாகாணம் மீதும் திணிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தின் இணக்கப்பாடு இல்லாத காரணத்தினால் சாதாரண பெரும்பான்மையோடு அச் சட்டம் நிறைவேற்றப்பட முடியாது என்கின்ற உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கள் மாவை சேனாதிராயாவை மனுதாரராகக் கொண்ட இரண்டு வழக்குகளினூடாகப் பெறப்பட்டது.

மாகாண நிரலிலுள்ள விடயங்கள் மீது இப்படியாக மத்திய நாடாளுமன்றம் மேலாதிக்கம் செலுத்துவதை தவிர்ப்பது சமச்டியின் முதலாவது அடிப்படை குணாதிசயமாகக் கருதலாம்.

சமச்டியின் இரண்டாவது அடிப்படை குணாதிசயமாக நான் கருதுவது மாகாணத்திற்கென்று பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தை ஒரு தன்னிச்சையான அரசமைப்பு திருத்தத்தின் மூலம் மத்தி மீளப் பெற முடியாததாக இருத்தல் வேண்டும்.

இவ்விரண்டு அடிப்படை குணாதிசயங்களும் தற்போது நடைமுறையிலுள்ள 13ஆவது திருத்தத்தில் இல்லாத காரணத்தினால் இது சமச்டியல்ல என்று நாம் கூறினாலும் கூட, மேற்சொன்ன நான்கு நீதியரசர்களின் கருத்துப்படி 13ஆவது திருத்தம் இலங்கை அரசமைப்பை ஒற்றையாட்சியிலிருந்து சமச்டிக்கு மாற்றியிருக்கின்றது. ஆனால், மேற்றச் சொன்ன திருத்தங்களுக்குப் பிறகு ஐந்து நீதியரசர்கள் ஒற்றையாட்சி முறை பாதிக்கப்படவில்லை எனச் சொன்ன காரணத்தினால் 5/4 பெரும்பான்மையின் அடிப்படையில் இன்று அமுலிலிருக்கும் அரசமைப்புச் சட்டம் ஒற்றையாட்சி முறைமையை பெயரளவில் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்திலும் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

ஒற்றையாட்சி

ஒற்றையாட்சி முறை என்பது பிரித்தானியாவில் உருவான ஒரு கோட்பாடாகும் இது சட்டவாக்கல் அதிகாரத்தை மட்டும் மையப்படுத்தியதாகும். அதாவது மத்திய நாடாளுமன்றத்திற்கு நிகராக சட்டங்களை ஆக்கும் அதிகாரமுள்ள வேறு நிறுவனங்கள் இருக்க முடியாதென்பது அக்கோட்பாட்டின் அடித்தளமாகும்.

‘எழுதப்படாத அரசமைப்பைக் கொண்ட மகா பிரித்தானியா இன்றைக்கும் ஒற்றையாட்சியைக் கொண்டதாகக் கருதப்படுகின்றது. அப்படியிருந்த போதிலும் பிரித்தானியாவில் இன்று இருக்கும் அதிகார பகிர்வின் விஸ்தீரணம் எந்த சமச்டி நாட்டின் அதிகாரப் பகிர்வுக்கும் சளைத்ததல்ல. 1920ஆம் ஆண்டில் அயர்லாந்தை தனிநாடாகப் பிரித்துக் கொடுத்த சட்டத்திலிருந்து 1998 ஆம் ஆண்டு சுகொட்லாந்துக்கு பிரிந்து செல்லும் உரித்தோடு அதிகாரப் பகிர்வை கொடுத்த சுகொட்லாந்த்து சட்டம் வரைக்கும் ஒற்றையாட்சியின் பிரகாரம் பிரித்தானிய நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றப்பட்டவையாகும்.

கோட்பாட்டளவில் இச் சட்டங்களை பிரித்தானிய நாடாளுமன்றம் தன்னிச்சையாக இரத்துச்செய்யும் தகைமையைக் கொண்டிருந்தாலும் கூட நடைமுறையில் அது எப்போதுமே சாத்தியமற்றது. ஆதலால் பெயரளவில் ஒற்றையாட்சி முறையை பிரித்தானியா கொண்டிருந்தாலும் நடைமுறையில் உலகிலுள்ள பெரும்பாலான சமச்டி ஆட்சி முறையை விடக் கூடுதலான சமஷ்டி குணாதிசயங்களை அது கொண்டதாகக் காணப்படுகின்றது.

ஆகவே, பலர் கருதுவதை போல சமச்டி என்பது ஒற்றையாட்சிக்கு நேரெதிரான ஆட்சிமுறை என்பதை விட பெயரளவில் ஒற்றையாட்சி நாடுகளுக்குள்ளும் முழுமையாக ஊடுருவக்கூடியது. ஆகவே, இன்றைய சமச்டியின் பரப்பளவு பற்றி பேசுகின்றபோது ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு முறைமையாக அதனை அணுக முடியாது.

அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டதில் சமச்டி என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்கா அரசமைப்புச் சட்டம் சமச்டி கட்டமைப்பிலானதென்பதில் எவருக்குமே சந்தேகம் கிடையாது.

பல நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை ஒப்பீடு செய்கின்ற தாமாசுஓ கீக்லின்னுடைய Comparative Federalism: A systemic Inquiry, Second Edition (2015) என்ற புத்தகத்தில் கீழ்க் காணும் குறிப்புகளையும் காணலாம்.

அதேபோல் சுபெயின் நாட்டினுடைய அரசமைப்புச் சட்டம் சமச்டியென்று பெயர் குறிப்பிடப்படாத போதிலும் அதிகாரப் பகிர்வு அலகுகளின் சட்டவாக்கல் அதிகாரத்தை மீறி தேசிய அரசாங்கம் சட்டங்கள் இயற்ற முடியாது. அதேபோல் மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும் முடியாது. இவ்விரண்டு காரணங்களின் நிமிர்த்தம் சுபெயின் நாடு பெயரில் தவிர மற்றெல்லாவற்றிலும் சமச்டி நாடாக கருதப்படுகின்றது.

மாறாக ஆசுதிரியா நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் பெயரளவில் சமச்டி முறையென்று என்று அழைக்கப்பட்டாலும் மத்தியின் மேலாதிக்கம் மிகவும் கூடியதாக காணப்படுகின்றது

இந்திய அரசமைப்பு

எமது அண்டைய நாடான இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் ஒற்றையாட்சி என்றோ சமச்டி என்றோ பெயரிடப்படாத ஒன்று. இது பூரணமான சமச்டியுமல்ல பூரணமான ஒற்றையாட்சியும் அல்லாத இரண்டும் கலந்த ஒரு முறைமை என்று கூறப்படுகின்றது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வரைந்த அரசியல் நிர்ணய சபையின் தலைவர் அம்பேத்கார் எமது அரசமைப்புச் சட்டம் கால சூழ்நிலைகளின் தேவைப்பாட்டுக்கமைய ஒற்றையாட்சியாகவும் சமச்டியாகவும் இருக்கக் கூடியது என்று கூறியிருக்கின்றார்.

2014ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் மாவை சேனாதிராயாவுக்கு எதிராக 6ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைவாக தொடரப்பட்ட வழக்கொன்றின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு ஆகசுட் மாதம் 4ஆம் திகதி பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூன்று நீதியரசரைக் கொண்ட உயர்நீதிமன்றக் குழாமொன்றினால் வழங்கப்பட்டது. பல நாடுகளினுடைய அரசமைப்புக்களின் பல சட்ட நிபுணர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பிலே பின்வருமாறு கூறப்பட்டிருக்கின்றது:-

“நாடுகளை ஒற்றையாட்சி அல்லது சமச்டி என்று பெயரிடுவது தவறான அர்த்தத்தை தரக்கூடும். சில ஒற்றையாட்சி நாடுகள் சமச்டி குணாதிசயங்களோடும் சில சமஷ்டி நாடுகள் சில ஒற்றையாட்சி குணாதிசயங்களோடும் காணப்படலாம்… ஆகையால் இறைமை, அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகார பரவலாக்கம் என்பவை ஓர் ஒற்றையாட்சி அரசுக்குள் சமச்டி முறையிலான ஆட்சி முறையை ஏற்படுத்த வழிவகுக்கலாம்.’’

சமச்டி என்று அழைக்கப்படுகின்ற அரசமைப்புச் சட்டங்களைக் கொண்ட எல்லா நாடுகளிலேயும் சில ஒற்றையாட்சி குணாதிசயங்கள் காணப்படும். அந்த நாடு பிளவுபடாமல் ஒரே நாடாக இருப்பதற்கான ஏற்பாடுகள்தான் அந்த ஒற்றையாட்சி குணாதிசயங்கள். ஆனால், இவற்றைக் காரணமாகக் கொண்டு அது சமச்டி அல்லதென்று கூறிவிட முடியாது.

பெயர் இல்லாமலும்

சமகால இலங்கையில் இன்றைய சமச்டி என்பது வெறுமனே பெயரளவில் நின்று விடாமல் எல்லா வகையான அரசமைப்பு முறைமைகளுக்குள்ளும் பரவி-யுள்ளது. ஆகையால் சமச்டி என்பது வெறுமனே பெயரால் மட்டும் வர்ணிக்கப்படும் ஓர் ஆட்சி முறையாக இருக்க முடியாது. மாறாக ஒரு நாட்டின் அரசமைப்பு சட்டத்தின் உள்ளடக்கத்தை ஆராய்கின்றபோது சமச்டியின் அடிப்படைக் குணாதிசயங்கள் காணப்படுமாக இருந்தால் அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும், பெயரே கொடுக்காவிட்டாலும் அது சமச்டி ஆட்சி முறையாகவே இருக்கும்” – என்றார்........

அதனால் எதிர்கட்யில்லாமல் ஆளுங்கட்சியாகவுள்ளோமா   என்றுமக்கள் எண்ணலாம். ஆட்சியை எதிர்க்கும் கட்சி தமிழரசுக்கட்சி தமிழர் உரிமைக்கான கட்சி என்ற  கோணத்தை விட்டுவிடுங்கள். என்பதையே அரசியல் அங்காடிச்  சோமண்ணை சொல்கின்றார்!